அ.தி.மு.க., நிர்வாகி தலைமறைவு
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், வெள்ளானைப்பட்டி ஊராட்சியில், குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து, ஊராட்சி தலைவர் கவிதா தரப்புக்கும், துணைத்தலைவர் ராஜன் தரப்புக்கும் இடையே கடந்த 23ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தி.மு.க., கலை இலக்கிய பேரவையின் மாவட்ட அமைப்பாளர் செல்வராஜை, அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய தலைவரும், ஊராட்சி துணைத்தலைவருமான ராஜன் மற்றும் அவரது உறவினர்கள் முத்துக்குமார், செந்தில்குமார் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
தாக்குதலுக்குள்ளான செல்வராஜ் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார், அ.தி.மு.க., நிர்வாகி ராஜன், முத்துக்குமார், செந்தில்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு, செய்து தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சி தலைவர் கவிதா தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக, ஒன்றிய சேர்மன் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் ராஜன் மீது கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோவை ரூரல் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
காரமடை அருகே மருதூரை சேர்ந்தவர் நாகராஜ், 65. விவசாயி. இவர் மருதூர் கணுவாய்பாளையம் பகுதியில் உள்ள தனி நபர் தோட்டம் ஒன்றில், விவசாய பணிகளை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், தோட்டத்தில் உள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நாகராஜ் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.---
கணவர் வேண்டாம் : அடம் பிடித்த பெண்
காரமடையை சேர்ந்த சுமார் 25 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். அந்த பெண்ணின் கணவர், பெற்றோர் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் பெண்ணை மீட்டு, நேற்று காரமடை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அப்போது, அவரது பெற்றோரிடம் அந்த பெண், தனக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை.
திருமணம் ஆகி மனைவியை இழந்த ஒருவருடன் தான் வாழ பிடித்துள்ளது எனக்கூறி அடம் பிடித்தார். காரமடை போலீசார் சமாதானம் செய்து அந்த பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ----
கள் விற்க முயன்ற 4 பேர் கைது
காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுகிறதா என காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று, தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சீளியூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கள் இறங்கி விற்பனைக்கு வைத்திருந்த சுப்பிரமணி, 64, முருகானந்தம், 54, திருமூர்த்தி, 54, தேவராஜ், 66 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 லிட்டர் கள் பறிமுதல் செயயப்பட்டது. பின், கைது செய்தவர்களை பிணையில் விடுவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, காரமடை போலீஸ் ஸ்டேஷனில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், சார்பில் மாநிலத் தலைவர் பாபு தலைமையில், விவசாயிகள் ஒன்று திரண்டு, கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.
இதுகுறித்து, பாபு கூறுகையில், விவசாயிகள் மீது இது போன்று தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டால், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராடுவோம். பிற மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ளது. தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும், என்றார்.---
காதலிக்க மறுத்த பெண்ணுக்கு மிரட்டல்; ஒருவர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அகில், 24. இவர் அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகி குழந்தை உள்ள 34 வயதுள்ள பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். போன் செய்து அடிக்கடி அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணை தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி, என்னை காதலிக்கா விட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த அகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.