வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோதிபுரம், முதல் வீதியில் வசிக்கும் சக்திகுமார்,30, நபருக்கு டெலிவரி கொரியர் வாயிலாக வந்த பார்சலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், டாக்டரின் உரிய ஆவணங்கள் இல்லாமல், 600 வலி நிவாரண மாத்திரைகள், ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள், தண்ணீரில் கரைத்து ஊசி வாயிலாக உடலில் செலுத்துவது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சக்திகுமார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வீடு புகுந்து நகைகள் திருட்டு
மேட்டுப்பாளையம் மாரண்ணன் வீதி, ராஜபுரம், பங்களா மேடு, உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வீடுகளில் நேற்று முன் தினம் ஒரே நாளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. இதில் பங்களா மேடு பகுதியில் மட்டும் ஒரு வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் பணம் திருடு போனது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் மற்றும் அவரது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.மேலும், சி.சி.டி.வி., கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அன்னூர் சாலையில் சந்தேகத்தின் பேரில், போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன், 33, என்பதும், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், கார்த்திக் மீது கோவை, தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
பங்களாமேடு பகுதியில் திருடியது கார்த்திக் என கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
-----