ADDED : பிப் 05, 2025 11:43 PM
பணம் திருடிய பெண் கைது
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 70. விவசாயி. இவர் மனைவியுடன் வசித்து வருகிறார்.
கோத்தகிரியை சேர்ந்த தனலட்சுமி, 45, என்பவரை வீட்டு வேலைக்காக, ராமசாமி நியமித்திருந்தார். அவருடைய நடவடிக்கை பிடிக்காத காரணத்தினால் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்.
இதனிடையே நேற்று முன் தினம் தனலட்சுமி, ராமசாமியின் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் ராமசாமியின் மனைவி மட்டும் இருந்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் படுத்து ஓய்வு எடுத்திருந்த நிலையில், தனலட்சுமி வீட்டின் அறைக்குள் நுழைந்து, ரூ.1,500ஐ திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
அப்போது, சுதாரித்து கொண்ட ராமசாமியின் மனைவி, வீட்டிற்கு வெளியே வந்து பூட்டிவிட்டு, சத்தம் போட்டார். பின் அக்கம் பக்கத்தினர் வந்து, தனலட்சுமியை பிடித்து சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
---தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
சூலூர் அடுத்த நடுப்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் செல்வி. இவருக்கு ரித்திக் ரோஷன்,5 என்ற மகன் உள்ளார்.
அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வரும் மகனை, நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அழைத்து வந்தார். மகனுக்கு காபி போட வீட்டுக்குள் சென்றார்.
இந்நிலையில், எதிரில் வீடு கட்டி கொண்டிருக்கும் இடத்தில், தண்ணீர் தொட்டி மூடப்படாமல் இருந்துள்ளது. அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கால் தவறி தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.
குடும்பத்தினர், சிறுவனை தொட்டியில் இருந்து மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து சூலூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் திருட முயன்றவர் கைது
சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம் பாளையம் சின்ன தோட்டத்தை சேர்ந்தவர் சரோஜினி, 65. நேற்று முன்தினம் இரவு, வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது. சரோஜினி கதவை திறக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அந்நபர் ஜன்னலை உடைக்க முயன்றதால், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சேனாதிபதி, தேவராஜன் ஆகியோருக்கு சரோஜினி போன் செய்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு வந்து தப்பிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தர்மராஜ்,45 என்பதும் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததும் தெரிய வந்தது. ஜாமினில் வெளி வந்து வீட்டில் திருட முயன்றுள்ளார். இதையடுத்து, அந்நபரை சுல்தான்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், தர்மராஜை கைது செய்தனர்.