ADDED : பிப் 12, 2025 11:41 PM
நகை பறித்த கும்பலுக்கு வலை
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன், 20. கோவை திருமலையாம்பாளையத்தில் தங்கி, குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன், ஒரு பெண், தான் பீளமேட்டில் வசிப்பதாகவும், நர்ஸாக வேலையில் உள்ளதாகவும், இன்ஸ்டாகிராமில் தோழியாக விரும்புவதாகவும் கூறி, மாணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதை ஏற்றுக்கொண்ட மாணவன், அப்பெண்ணுடன் 'சாட்டிங்' செய்து வந்துள்ளார்.
கடந்த, 10 ம்தேதி போன் செய்த பெண், தான் சூலூர் வழியாக கோவை செல்வதாகவும், சூலூருக்கு வந்தால் இருவரும் சந்திக்கலாம், என, கூறியுள்ளார். அதை நம்பி சூலூர் வந்த மணிகண்டன், அப்பெண்ணை சந்தித்தார். அருகில் தான் என் தோழி வீடு உள்ளது அங்கு செல்லலாம் என அப்பெண் கூறி, மாணவனை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, இருட்டில் மறைந்திருந்த நான்கு பேர், மாணவனை மிரட்டி நகையை பறித்து கொண்டு, அப்பெண்ணுடன் தப்பினர். இதுகுறித்து மாணவன் சூலூர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
கணவன் தூக்கிட்டு தற்கொலை
காரமடை அடுத்துள்ள கன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன், 42. இவரது மனைவி சரண்யா, 32. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
துரைமுருகன் தேக்கம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சலில் இருந்த துரைமுருகன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
--