ADDED : மார் 03, 2024 10:12 PM
பைக்கில் வந்து ஆடு திருடிய இருவர் கைது
மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, 32. ஆடு மேய்ப்பவர். இவர் தனது வீட்டின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், ஆடு ஒன்றை திருடி, பைக்கில் ஏற்றிக் கொண்டு தப்பித்து செல்ல முயன்றனர்.
அப்போது கருப்பசாமி, அவர்களது நண்பர்களுடன் பைக்கை துரத்தி சென்று, ஆடு திருடிய இருவரையும் பிடித்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் ஆடு திருடியது குன்னூரை சேர்ந்த கண்ணன், 34, மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபு, 28, என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-----ராட்டினத்தில் டிக்கெட் எடுக்காமல் தகராறு
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் கமலநாதன், 30. காரமடை தேர் திருவிழாவையொட்டி காரமடை பஸ் ஸ்டாண்டில் கேளிக்கை விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் டிஸ்கோ ராட்டினம் விளையாட்டில் டிக்கெட் பரிசோதகராக கமலநாதன் பணிபுரிகிறார்.
காரமடை சேர்ந்த சுபாஷ், 22, மற்றும் கமலேஷ், 20 இருவரும் டிஸ்கோ ராட்டினத்தில் டிக்கெட் எடுக்காமல் ஏறினர். கமலநாதன் டிக்கெட் கேட்ட போது, அவரிடம் சுபாஷ், கமலேஷ் இருவரும் தகராறு செய்தனர். பின் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.கமலநாதன் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் சுபாஷ், கமலேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
----இருசக்கர வாகனம் மோதி காவலாளி பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்டதாபுரத்தில் இருசக்கர வாகனம் மோதி, காவலாளி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் ரோடு, பெட்டதாபுரத்தில் வசித்தவர் நஞ்சய்யன்,60; தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர்.
இரவு வேலைக்கு செல்ல கோவை-மேட்டுப் பாளையம் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதி, பலத்த காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கு போட்டு பெண் தற்கொலை
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 59. இவரது மனைவி சீதா. இந்த தம்பதியினருக்கு இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ராஜேஸ்வரி, 26, திருமணமானவர். இவருக்கு ஒரு வயதில் ஆண் மகன் உள்ளார்.
ராஜேஸ்வரிக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, ராஜேஸ்வரி தனது ஒரு வயது குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். ராஜேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனிடையே குட்டையூர் அருகே வேப்ப மரத்தில் தூக்கு போட்டு ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.---
