மொபைல் போன் திருடனுக்கு தர்ம அடி
கதிர்நாயக்கன்பாளையம், நாகம்மாள் காலனியை சேர்ந்தவர் அனூப்,34. இவர், தனது மாமனாரை அழைத்து வர, துடியலூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் அனூப்பின் மொபைல் போனை பறித்துக் கொண்டு, பைக்கில் தப்பி சென்றனர். அனூப் மற்றும் அவரது மாமனார், பொதுமக்கள் ஆகியோர், திருடர்களை துரத்திச் சென்றபோது, கவுண்டர் மில் பஸ் நிறுத்தம் அருகே திருடர்கள் சென்ற பைக் டிவைடரில் மோதி கீழே விழுந்தனர். அவர்களை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மொபைல் போன் திருடியவர்கள் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 23, மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, 15 வயது சிறுவன் என, தெரியவந்தது. கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்து பைக் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பஸ் மோதி ஒருவர் பலி
கவுண்டம்பாளையம் ஜெயம் நகரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன், 25. இவரது நண்பர் தினேஷ்குமார், 25. இருவரும் கணுவாய் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது.
இதில், பைக்கில் பயணம் செய்த தினேஷ்குமார், 25, உயிர் இழந்தார். லட்சுமி நாராயணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

