செல்போன் பறித்தவர் கைது
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 26. கூலி தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் பைக்கில் சென்ற போது, அங்குள்ள தனியார் பள்ளி அருகே இளைஞர் ஒருவர் அவரை கைக்காட்டி நிறுத்தினார்.
சுதாகர் பைக்கை நிறுத்தியதும், அந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சுதாகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த அசாருதீன், 26, என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து செல்போனை மீட்டனர்.
------அதிக மது குடித்தவர் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன்,60. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி அதிக அளவு மது அருந்திவிட்டு, ஆங்காங்கே படுத்து கிடப்பார். நேற்று முன்தினம் கூடலூர் கவுண்டம்பாளையம் ஒயின்ஷாப் ரோட்டின் ஓரத்தில் படுத்து கிடந்தார்.
இது குறித்து மகன் வேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து பார்த்தபோது, சவுந்தரராஜன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி பலி
கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் ராம்சந்த், 37. இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அருகம்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 30 அடி உயரத்தில் கூரையில் தகடு பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேல் கூரையிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்ற கடைக்கு சீல்
கோவை புறநகரில் உணவு பொருள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், பெட்டிக்கடை, மளிகை கடை மற்றும் பேக்கரிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், மாலை அன்னூர், ஓதிமலை சாலையில், ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட 300 கிராம் புகையிலைப் பொருட்கள் பிடிபட்டன.இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருப்போர், கொண்டு செல்வோர், விற்போர் குறித்து தகவல் தெரிந்தால் கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்,' என ரூரல் போலீஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

