கோவில்களில் திருடியவர்கள் கைது
அன்னூர் அருகே பிரசித்தி பெற்ற சாலையூர், பிராட்டி அம்மன் கோவிலில் கடந்த 24ம் தேதி இரவு பூட்டை உடைத்து ஆம்ப்ளிபையர் திருடப்பட்டது. உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்தது. கதவுகரை பகவதி அம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டது. குன்னத்தூரில் வாழ வழி காட்டும் முனியப்பன் சாமி கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டது.
அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்றுமுன்தினம் எஸ்.ஐ. அழகேசன் தலைமையில் போலீசார், வாகன சோதனை செய்த போது கிருஷ்ண கவுண்டன் புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 18. பிடிபட்டார்.
விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன், 22. அஜித், 23. புளியம்பட்டியை சேர்ந்த தயாநிதி, 19 ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கோவில்களில் திருடியது தெரிய வந்தது.
அவர்கள் ஓட்டி வந்த இரண்டு மோட்டார் பைக்குகளும் திருடப்பட்டது என தெரிய வந்தது. இரண்டு பைக்குகள் மற்றும் ஆம்ப்ளிபையர் மீட்கப்பட்டது.
ஆடு திருடியவர்கள் கைது
கோவை மாவட்டம் காரமடை அருகே அண்ணா முதலியார் பகுதியை சேர்ந்தவர் நவமணி, 50. இவர் நேற்று முன்தினம் கன்னார்பாளையம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால், அருகில் உள்ள வீட்டுக்கு தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவர், மேய்ந்து கொண்டிருந்த அவரது ஆடுகளில், சுமார் 15 கிலோ எடை உள்ள வெள்ளை நிற ஆட்டுக்கிடாய் ஒன்றை திருடிக்கொண்டு, ஸ்கூட்டரில் வைத்து சென்று விட்டனர்.
ஆட்டை பல இடங்களில் தேடினர். அப்போது கருப்பராயன் கோவில் பகுதியில் ஆடு இருப்பதை கண்டறிந்தனர். பின் ஆட்டை திருடிய இருவரையும் கையும் களவுமாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் ஆட்டை திருடியது அசோக் குமார், 37, பெயிண்டர், ராமச்சந்திரன், 23, கூலி தொழிலாளி என தெரியவந்தது. போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து ஆட்டை பறிமுதல் செய்தனர்.
---

