செல்போன் திருடியவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் வீரமூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ், 39. இ-சேவை மையத்தில் பணிபுரிகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல காரில் வந்தார். இரவு வெகு நேரம் ஆனதால் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தனியார் தீம் பார்க் அருகே வண்டியை நிறுத்திவிட்டு, இவரது செல்போன், அம்மா மற்றும் உறவினர் செல்போன்களை டிரைவர் சீட்டுக்கு அருகே சார்ஜ் போட்டுவிட்டு தூங்கினார். அப்போது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா, 21, அரவிந்தன், 24, கூலி தொழிலாளிகள் 3 செல்போன்களையும் திருடி சென்றனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சூர்யா, அரவிந்தன் ஆகியோரை கைது செய்து மூன்று செல்போன்களையும் மீட்டனர்.
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை, பெருக்குப்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி,50, பழங்குடியினத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. வீட்டில் மின்சார விளக்கு மங்கலாக எரிந்ததால், வீட்டுக்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, உடல் கருகி, அதே இடத்தில் குருசாமி உயிரிழந்தார்.
தங்கச்செயின் பறித்தவர் கைது
நரசிம்மநாயக்கன்பாளையத்தில், 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரோட்டில் நடந்தது சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நாலரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இது தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், 30, கைது செய்தனர்.
அவர் மீது அவிநாசிபாளையம், பல்லடம், திருப்பூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து, நாலரை பவுன் தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மணிகண்டன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இருவேறு விபத்துகளில் இருவர் பலி
சூலூர் அடுத்த இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 52. வாட்ச்மேன். நேற்று முன்தினம் டீ குடிக்க பைக்கில் சென்றார். அப்போது, எதிரில் வந்த பைக் மோதி கீழே விழுந்து தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல், பட்டணம் புதூரை சேர்ந்தவர் ஜெயா, 49. நேற்று மதியம் பட்டணம் புதூர் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த ஆம்னி பஸ் மோதி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.