மின் கம்பி திருடியவர் கைது
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து கரியாம்பாளையம் செல்லும் சாலையில், பெரியபுத்தூர் பகுதியில் அடிக்கடி மின் கம்பிகள் திருடு போவதாக புகார் எழுந்தது.
அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் அருகே மின் கம்பிகளை திருடிக் கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற மக்கள் கையும், களவுமாக பிடித்து காரமடை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த துரை, 47, என்பதும் தற்போது காட்டம்பட்டி பகுதியில் தங்கி பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த காரமடை போலீசார், அவரிடம் இருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மின் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.
----பூச்சி மருந்து குடித்த எலக்ட்ரீசியன் பலி
மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனிஸ், 42. எலக்ட்ரீசியன். கடன் தொல்லை காரணமாக இவர், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இதனிடையே இவர் ஊட்டி சாலையில் நடந்து சென்ற போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாயிலாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவர்கள் முகமது யூனிஸை பரிசோதித்த போது, அவர் கூல்டிரிங்க்ஸில் பூச்சி மருந்து கலந்து குடித்தது தெரியவந்தது.
மேலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
--- மூதாட்டி உடல் மீட்பு
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வன பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள பவானி ஆற்றில், பம்ப் ஹவுஸ் அருகே அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் கரை ஒதுங்கியது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், மூதாட்டி தொடர்பான விவரங்களை விசாரித்து வருகின்றனர்.------