குற்றவாளிகளை பிடிக்க முடியாமல்போலீசார் திணறல்
சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் அவிநாசி ரோட்டில், பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த, விநாயகர் மற்றும் நாகர் சிலைகள், கரையாம் பாளையம் ரோட்டில் உள்ள கோவிலில் கன்னிமார் சிலைகளை கடந்த, 17 ம்தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தெளிவான காட்சிகள் கிடைக்காததால், போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ., தலைமையிலான தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தேடி ஆந்திரா சென்றுள்ளனர்.
மடத்தின் பூட்டை உடைத்துதங்க நகைகள் திருட்டு
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பொகளூர் பகுதியில் செந்தில்குமார், 52, என்பவர் அகத்தியர் ஞானபீடம் என்ற பெயரில் மடம் ஒன்றினை நடத்தி வருகிறார். இந்த மடத்தினை ஒட்டி அவரது வீடு உள்ளது. இந்த மடத்திற்கு அடிக்கடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். இரவு மடத்தை பூட்டிவிட்டு, தனது வீட்டிற்கு செந்தில்குமார் தூங்கச் சென்றார்.
பின் நேற்று முன் தினம் காலை எழுந்து மடத்தை பார்த்த போது, மடத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 3 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் ஒரு லட்சம் திருடு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் உடனடியாக வந்து மடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த அருண்குமார், 29, காளிதாஸ், 29, என தெரியவந்தது. இவர்களை நேற்று கைது செய்த போலீசார், தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர்.
---மோட்டார் பைக் திருடியவர் கைது
அன்னூர், அ.மு. காலனியைச் சேர்ந்தவர் இர்பான், 33. இவர் கடந்த 14ம் தேதி இரவு அன்னூர், ஓதிமலை சாலையில், தனது மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு, சிறுமுகை சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், அன்னூர், கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த ரகு, 32. என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, மோட்டார் பைக்கை மீட்டனர். ரகு அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.