மின் கம்பி மீது மோதிய கார்
மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் நேற்று கார் ஒன்று தாறுமாறுமாக சென்றது. இதனிடையே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பி மீது மோதி, அருகில் இருந்த தோட்டத்து கம்பி வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. கார் விபத்துக்குள்ளானதும் அதில் இருந்து இறங்கிய 5 பேர், ஊர் மக்கள் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி சென்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் இருந்த பிரிட்ஜில் தீ
கோவை மாவட்டம் காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி உள்ளது. இங்கு பிரவீன் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனிடையே நேற்றுக்காலை வீட்டில் யாரும் இல்லை. அப்போது அந்த வீட்டில் இருந்து புகை கிளம்பியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் அதை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.
சூதாட்டம்; 6 பேர் கைது
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபங்களில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.ஐ., தனபால் தலைமையிலான போலீசார், தனியார் மண்டபங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கோவையை சேர்ந்த இளங்கோ, 34, செல்வராஜ், 63, சரண் குமார், 31, பவித்திரன், 31, பழனிச்சாமி, 50, பரத், 24, ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மட்டும் ரூ.30 ஆயிரத்து 80 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின் அனைவரையும் பிணையில் விடுவித்தனர்.
மூன்று கார்கள் மோதல்; ஆறு பேர் காயம்
உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது காரில் சூலூர் வந்தார். குமரன் கோட்டம் அருகே யு டேர்ன் எடுக்க முயன்றார். அப்போது, கோவை நோக்கி சென்ற சொகுசு கார், சுப்பிரமணி கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் அந்த கார் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.
இதில் மூன்று கார்களில் வந்த, கலாவதி, முகமது ஆசிப், தெய்வானை, ராகுல் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

