
ஓடும் காரில் தீ
கோவை மாவட்டம் காரமடை காந்தி சிலை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன், 63. பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து தனது காரை எடுத்துக்கொண்டு கோவைக்கு புறப்பட்டார். அப்போது காரமடை ரயில்வே மேம்பாலம் பகுதியை கார் கடந்த போது, திடீரென காரின் முன்பகுதியில் புகை வந்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்தினார். உடனடியாக இறங்கி காரின் முன்பகுதி பேனட்டை திறக்க முயன்றார். ஆனால் அதற்குள்ளாக காரில் தீ பற்றி, கார் முழுவதும் பரவி எரிந்து சேதமானது. காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் வாசுதேவன் உயிர் தப்பினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் காரமடையில் சுமார் அரை நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.--
-சீட்டாடிய 11 பேர் கைது
அன்னூர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில், போலீசார் நாரணாபுரம் ஊராட்சியை சேர்ந்த சாலையூர் சுடுகாட்டு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்த 11 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 9350 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இத்துடன் ஒரு மொபட், இரண்டு ஸ்கூட்டர்கள், ஏழு மோட்டார் பைக்குகள், ஒரு பயணிகள் ஆட்டோ ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இது குறித்து அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எலக்ட்ரீசியன் தற்கொலை
காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள பரியான் கொம்பை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 35. எலக்ட்ரீசியன். திருமணம் ஆகாதவர்.திருமணமாகாத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், வெள்ளியங்காடு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஆடு மேய்க்க சென்ற ஒருவர், பல நாட்களாக மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இளைஞரின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் அது நாகராஜ் என உறுதி செய்யப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.