சென்டரிங் ஷீட்டுகள் திருட்டு பிரஸ்காலனி, சாந்திமேடு, லட்சுமிபுரத்தில் வசிப்பவர் சுந்தரராஜ், 42; பில்டிங் காண்ட்ராக்டர். இவர் அதே பகுதியில் கட்டடங்கள் கட்ட, 150 கான்கிரீட் சென்ட்ரிங் ஷீட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். அதில் இருந்த, 60 ஷீட்டுகள் காணாமல் போனது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் சுந்தரராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஜோதிபுரம், ரேணுகா தேவி கோவில் வீதியில் வசிக்கும் சந்திரசேகர், 35, இத்திருட்டை நடத்தியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து காணாமல் போன, 60 கான்கிரீட் சென்டரிங் ஷீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, சந்திரசேகரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மனைவி மீது வழக்கு பதிவு அன்னூர், தென்னம்பாளையம் சாலையில், பிரியாணி கடை நடத்தி வருபவர் செல்லமுத்து, 30. இவரது மனைவி காயத்ரி, 29.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியாணி கடையில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆவேசமடைந்த மனைவி காயத்ரி கடையில் மீன் பொறித்துக் கொண்டிருந்த சூடான எண்ணெயை எடுத்து கணவர் செல்லமுத்துவின் தலை மற்றும் முகத்தின் மீது ஊற்றி விட்டார்.
சூடான எண்ணை விழுந்ததால் அலறி துடித்த செல்லமுத்துவை அருகில் இருந்தவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில், அவரது மனைவி காயத்ரி மீது, அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஏழு பேர் கைது அன்னூர் போலீஸ் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார், குன்னத்தூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது நாதே கவுண்டன் புதூர் நான்கு ரோடுக்கு அருகே காட்டுக்குள் பந்தயம் வைத்து சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த ஏழு பேர் பிடிபட்டனர். இரண்டு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

