UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 11:30 PM

வடவள்ளி: கந்த சஷ்டி விழாவையொட்டி, கோவை, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.
கடந்த 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், நேற்றுமுன்தினம், சூரசம்ஹாரம், நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தன. நேற்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்களால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
காலை, 6:00 மணிக்கு சுப்ரமணியசுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்களின் மொய் பணமாக, 2 லட்சத்து 43 ஆயிரத்து 39 ரூபாய் வசூலானது. பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, மலர் பல்லக்கில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் நிறைவு செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
