/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 மணி நேர போராட்டத்துக்கு பின் பிடிபட்ட முதலை; குட்டையில் இருந்து நீரை வெளியேற்றினர்
/
30 மணி நேர போராட்டத்துக்கு பின் பிடிபட்ட முதலை; குட்டையில் இருந்து நீரை வெளியேற்றினர்
30 மணி நேர போராட்டத்துக்கு பின் பிடிபட்ட முதலை; குட்டையில் இருந்து நீரை வெளியேற்றினர்
30 மணி நேர போராட்டத்துக்கு பின் பிடிபட்ட முதலை; குட்டையில் இருந்து நீரை வெளியேற்றினர்
ADDED : செப் 18, 2024 09:02 PM

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே குட்டையில் இருந்த முதலையை, 30 மணி நேர போராட்டத்துக்குப்பின் சிறுமுகை வனத்துறையினர் பிடித்தனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே, பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமம் உள்ளது. இக்குடியிருப்பு பகுதி அருகே பள்ளத்தில், குட்டை மற்றும் தடுப்பணை உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், பள்ளத்தில் வந்த தண்ணீரால் தடுப்பணை நிறைந்தது. எப்படியோ ஒரு முதலை, இக்குட்டைக்கு வந்து நிரந்தரமாக தங்கி உள்ளது. தண்ணீர் குறைந்ததும், முதலை வெளியே வருவதை, இக்கிராம மக்கள் பார்த்துள்ளனர். இதை பார்த்த மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குட்டையை ஆய்வு செய்த பின், முதலை இருப்பதை உறுதி செய்தனர். குட்டையில் முள் மரங்களும், தண்ணீர் அதிகம் உள்ளதாலும், முதலையைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், குடியிருப்பு பகுதிகளுக்கும், குட்டைக்கும் இடையே உள்ள காலி இடத்தில், சிறுமுகை வனத்துறையினர், வலைகளை கட்டி வைத்தனர். மக்கள் யாரையும், குட்டைப்பக்கம் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை செய்திருந்தனர்.
இதை அடுத்து, 17ம் தேதி காலையில் இருந்து, முதலையை பிடிக்கும் பணியில், சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில், 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர்.
குட்டையில் இருந்த தண்ணீரை மற்றொரு குட்டைக்கு மின் மோட்டார் வாயிலாக வெளியேற்றினர். நேற்று மதியம், 2:30 மணி அளவில் முதலை தண்ணீரில் இருந்து வெளியே வந்தது. வனத்துறையினர் கயிற்றைக் கட்டி, முதலையை பத்திரமாக பிடித்தனர்.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், பட்டக்காரனூர் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றினோம். தண்ணீர் வடிந்தவுடன், முதலை வெளியே தெரிந்தது. 30 மணி நேர போராட்டத்திற்கு பின், முதலை பிடிக்கப்பட்டது. இரண்டு மீட்டர் நீளம், 10 வயதுடைய பெண் முதலை என தெரியவந்தது. இந்த முதலை பவானிசாகர் அணை தண்ணீரில் விடப்பட்டது, என்றார்.

