ADDED : ஜன 05, 2024 11:15 PM

மேட்டுப்பாளையம்:மோத்தேபாளையம் கிராம குட்டையில் உள்ள முதலையை பிடிக்க, சிறுமுகை வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மோத்தேபாளையம் கிராமம். இங்குள்ள குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் உள்ளதாக, கடந்த பத்து நாட்களுக்கு முன் சிறுமுகை வனத்துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் முதலையை கண்காணித்து வந்த வனத்துறையினர், கடந்த இரண்டு நாட்களாக முதலையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''மோத்தேபாளையம் குட்டையில் உள்ள தண்ணீர் மெல்ல மெல்ல வெளியேற்றப்பட்டு, நெட் அமைத்து முதலையை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. விரைவில் முதலை பிடிபடும்,'' என்றார்.----