/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டக்காரனுார் குட்டையில் சிக்கிய முதலை
/
பட்டக்காரனுார் குட்டையில் சிக்கிய முதலை
ADDED : ஜூலை 09, 2025 10:17 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனுார் கிராமத்தில், மழை நீர் தடுப்பனை குட்டையில் உலா வந்த முதலையை, வனத்துறையினர் பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் தடுப்பணை குட்டை ஒன்று உள்ளது. இக்குட்டையில் கடந்த சில நாட்களாக முதலை ஒன்று உலா வந்தது. இரவு நேரங்களில் குட்டையின் கரையோரம் முதலை இரை தேடி செல்வதை மக்கள் பார்த்து அச்சமடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனவர் சிங்காரவேலன் தலைமையிலான வனத்துறையினர், நேற்று சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு முதலை இருப்பதை உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து குட்டையை சுற்றி வலைகளை விரித்து, முதலை தண்ணீரில் இருந்து வெளியே சென்று விடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். பின், குட்டையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் உடன் வன ஆர்வலர்களும் கைகோர்த்து, சுறுக்கு வைத்து முதலையை பிடித்தனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில்,வன மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் முதலையை விட முடிவு செய்துள்ளோம். பிடிபட்ட முதலை பெண் முதலை. சுமார் 6 அடி நீளம் கொண்டது, என்றனர்.