/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் சாகுபடி கணக்கெடுப்பு நிறைவு
/
பயிர் சாகுபடி கணக்கெடுப்பு நிறைவு
ADDED : செப் 18, 2025 10:27 PM
கோவை; கோவை மாவட்டத்தில், காரிப் பருவத்தில், டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது.
நமது நாட்டில் வேளாண் சாகுபடி பருவங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜூன் முதல் செப். வரையிலான காரிப் பருவம், அக். முதல் மார்ச் வரையிலான ராபி பருவம், ஏப். முதல் மே வரையிலான ஜாய்டு பருவம். இப்பருவங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் குறித்த விவரங்கள், டிஜிட்டல் முறையில் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ஆண்டுக்கு மூன்று முறை இந்த டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு நடக்கிறது.
துவக்கத்தில், வி.ஏ.ஓ.க்கள் வாயிலாக கணக்கெடுப்பு நடந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், வேளாண் பல்கலை மாணவர்களைப் பயன்படுத்தி, நடத்தப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ஆக. முதல் வாரத்தில் துவங்கிய 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியில், வேளாண், தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டனர். கோவை மாவட்டத்தில், டிஜிட்டல் கிராப் சர்வே நிறைவடைந்துள்ளது.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுவாக காரிப் பருவத்தில், நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, சோளம், ராகி, உளுந்து, பச்சைப் பயறு போன்றவை பயிரிடப்படும். கோவை மாவட்டத்தில், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. மழை மற்றும் பருவநிலையைச் சார்ந்து, சில சாகுபடிகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். அந்த தாமத விதைப்பு குறித்தும் கணக்கெடுப்பில் சேர்த்து வருகிறோம். இத்தகவல்களை சரிபார்த்து தொகுக்கும் பணி தற்போது நடக்கிறது' என்றனர்.