/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை
/
300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை
ADDED : ஜன 03, 2025 11:57 PM

தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டியும், உலக நலன் வேண்டியும், 300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை துவங்கியது.
பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டியும், உலக மக்களின் நலன் வேண்டியும், 'நாதன் நாமம் நவில் நல்வேள்வி' என்ற ஞானவேள்வி, பேரூர் திருமடத்தில் நேற்று துவங்கியது.
இவ்வேள்விக்கு, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். இதில், 276 பாடல் பெற்ற தலங்களுக்கு, 276 சிவலிங்கங்களும், வைப்புத்தலங்கள், மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் என சேர்த்து, சுமார் 300 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், வேள்வி செய்து நன்னீராட்டு நடத்தினார்.
தொடர்ந்து, இந்த, 300 சிவலிங்கங்கள், பேரூர் திருமடம் மற்றும் கோவையில், கணபதி, குனியமுத்தூர் போன்ற ஒன்பது இடங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிகளிலும், பொதுமக்கள் நேரடியாக, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, 'போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம்' என்ற மந்திரத்தை ஓதி, கோடி அர்ச்சனை செய்ய உள்ளனர்.
பேரூர் திருமடத்தில் நடந்த இதன் துவக்க நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.