/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெருங்குது தீபாவளி! கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
/
நெருங்குது தீபாவளி! கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
UPDATED : அக் 06, 2025 06:27 AM
ADDED : அக் 06, 2025 12:17 AM

கோவை: தீபாவளியை முன்னிட்டு, கடைவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளது. துணிக்கடைகளில் தீபாவளி விற்பனை துவங்கி விட்டது.
குழந்தைகள், சிறுவர், சிறுமியர், ஆடவர், பெண்கள், முதியோர் என ஒவ்வொரு தரப்பினருக்கும், பல ரகங்களில் புத்தாடைகள் வைக்கப்பட்டுள்ளன.
சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளதால், துணிக்கடைகளில் நேற்று முதல், தீபாவளி விற்பனை களை கட்ட துவங்கியுள்ளது.
வரும் நாட்களில் கூட்டம் அதிகமாகும் என்று கருதியும், நிறைய கலெக் ஷன்களை பார்க்க நிறைய நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வந்த கூட்டம், நேற்று அதிகம். இதனால் காலை முதலே, துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
1,000, 2,000 மற்றும் 3,000ம் ரூபாய்க்கு மேல், துணி ரகங்களை எடுத்தால், பரிசுக் கூப்பன் என அறிவித்துள்ள சலுகைகள் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளன.
துணிக்கடைகள் மட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருட்கள், புதிதாக வந்துள்ள மொபைல் போன்கள் என வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்களை, ஆர்டர் செய்து விட்டால், வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் பல நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் வழங்குகின்றன.
சேலம், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகள் பலருக்கும், போதியளவு வியாபாரம் நடந்தது. இதனால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் பகுதிகளில், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
இன்னும் ஒரு சில நாட்களில் போனஸ் தொகை கைக்கு வரும் பட்சத்தில், தீபாவளி விற்பனை இன்னும் வேகமெடுக்கும்.