/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரட்டிப்பு பலன் தருகிறது கே 12 ரக சோள சாகுபடி
/
இரட்டிப்பு பலன் தருகிறது கே 12 ரக சோள சாகுபடி
ADDED : ஆக 13, 2025 08:46 PM

சூலுார்; கே 12 சோள ரகத்தை பயிரிட்டால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் கிடைக்கிறது, என, விவசாயிகள், அதிகாரிகளிடம் கூறினர்.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் இயக்க திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட வேளாண் துறை சார்பில், பயறு வகை சிறு தானியங்கள், மற்றும் எண்ணெய் வித்துக்கள், விதைகள் வினியோகம், செயல் விளக்க திடல் அமைத்தல் உள்ளிட்டவைகள், 7.54 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டதில், 21 ஆயிரத்து, 541 பேர் பயன் பெற்றுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
சூலுார் அடுத்த பீடம் பள்ளியில் விவசாயி நடராஜன், ஐந்து ஏக்கர் பரப்பில் கே 12 சோள விதைப்பண்ணை அமைத்துள்ளார். சூலுார் வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்ட, 30 கிலோ கே 12 ரக சோள விதைகள், கடந்த ஏப்., மாதம் விதைக்கப்பட்டது. தற்போது, முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த விதைப்பண்ணையில் கலெக்டர் பவன் குமார் மற்றும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கே 12 ரக சோளம், ஏக்கருக்கு, ஆயிரத்து, 250 முதல், ஆயிரத்து, 500 கிலோ மகசூல் கிடைக்கிறது. வெளி சந்தையில் விற்றால், கிலோவுக்கு, 40 ரூபாய் தான் கிடைக்கும்.
ஆனால், வேளாண் துறைக்கு, விதையாக கொடுப்பதால், கிலோவுக்கு, 60 ரூபாய் கிடைக்கிறது. அதனால், கூடுதலாக கிலோவுக்கு, 30 ரூபாய் லாபம் கிடைப்பது விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறது, என, விவசாயி நடராஜன், அதிகாரிகளிடம் கூறினார்.