ADDED : ஆக 22, 2026 05:31 PM
கோவை: பல்வேறு கறிக்கடைகளில் சிக்கன், ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையில் கடைகளுக்கு வெளியே தொங்கவிடப்பட்டு விற்கப்படுகின்றன.
‘ப்ரெஷ் கறி’ எனக்கூறி விற்பனை செய்யப்படும் இந்த இறைச்சிகள் துாசு, வாகனப் புகை, ஈக்கள் உள்ளிட்டவற்றால் மாசுபடுகின்றன.
காய்கறி போல இறைச்சியையும் மக்கள் அன்றாட உணவில் புரோட்டின் மற்றும் இதர சத்துகளுக்காக வாங்கி வருகின்றனர்.
ஆனால், இறைச்சியை பாதுகாப்பான வெப்பநிலையில் சேமிக்காமல், வெயில் மற்றும் துாசுக்கு இடையே நீண்ட நேரம் வெளியில் தொங்கவிடுவதால் நுண்ணுயிர்கள் பெருகும் வாய்ப்பு இருப்பதாக, உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் வைக்கப்படும் இறைச்சியை உட்கொள்வதால் உணவு விஷமாதல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக, ஈக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் மூலம் நோய்க்கிருமிகள் இறைச்சியில் படியும் அபாயமும் உள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.
கறிக்கடைகளில் இறைச்சியை திறந்தவெளியில் தொங்கவிடுவதை தடுத்து, சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு.
