ADDED : ஜூன் 22, 2025 11:31 PM

கோவை மாவட்டத்தில் முதன்முறையாக மலையோர கிராமத்தில் நடமாடிய காட்டுப்பன்றிகளை பிடித்து, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விடுவித்தனர்.
� மலையோர கிராம மக்களுக்கு விடிவு
� முதன்முறையாக வனத்துறையினர் அதிரடி
பெ.நா.பாளையம், ஜூன் 23--
கோவை வன கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியையொட்டியுள்ள மலையோர கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள காட்டுப் பன்றிகள், வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து அழிக்கின்றன. காட்டுப்பன்றி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, வன எல்லை பகுதியிலிருந்து, 3 கி.மீ., வரை தென்படும் காட்டு பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வன எல்லைக்குள் கொண்டு செல்வது, 3 கி.மீ., அப்பால் தாண்டி வரும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்வது என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இத்திட்டம் தொடர்பாக இதுவரை வருவாய் துறையினர், முக்கிய ஊர் பிரமுகர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டாலும், காட்டு பன்றிகளை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு செல்வது அல்லது அதை சுட்டுக் கொல்வது என்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இத்திட்டத்தால் பயன் எதுவும் இல்லை என விவசாயிகள் கூறி வந்தனர். இந்த நிலையில், தற்போது பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் இரவு நேரத்தில் வேளாண் பயிருக்கு சேதம் விளைவித்த காட்டுப் பன்றிகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடும் பணியை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் முதன்முறையாக மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் தெற்கு பீட் காந்தி நகர் பகுதியில் காட்டுப் பன்றிகள் பயிர் சேதத்தை ஏற்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டு பன்றிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெரிய அளவிலான கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாளில் இரண்டு பெரிய பெண் காட்டு பன்றிகளும், ஐந்து குட்டி காட்டு பன்றிகளும் கூண்டில் சிக்கின. பின்னர், அவை மற்றொரு கூண்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டு, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கோபநாரி மேற்கு பீட் கோபநாரி ரிசர்வ் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.