ADDED : ஏப் 23, 2026 06:38 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சர்வீஸ் ரோட்டில் குடிநீர் குழாய் சேதமடைந்ததால் ஓட்டளிக்க வந்த வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக செல்கிறது. இந்நிலையில், நேற்று மாலை வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்த நேரத்தில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தனியார் பேங்க் முன்பாக, சர்வீஸ் ரோட்டில் இந்த குழாய் சேதமடைந்து குடிநீர் அதிகளவு வெளியேறியது.
இதனால் ரோட்டில் வாகனங்கள் தடுமாறி சென்றனர். இதில், அதிகளவில் பள்ளிக்கு ஓட்டளிக்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். வயதானவர்கள் ஓட்டளிப்பதற்காக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். நீண்ட நேரமாக பள்ளி வளாகத்தின் வெளியே காத்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதை கவனித்த போலீசார் கூட்ட நெரிசலை கலைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு மேலாக குடிநீர் வெளியேறியதால் மார்க்கெட் வரை குடிநீர் தேங்கியது. ரோட்டில் வழிந்து ஓடிய குடிநீரை பார்த்த மக்கள், சிறிது நேரம் கழித்து வந்து ஓட்டு போடலாம் என, திரும்பிச் சென்றனர்.
ஓட்டளித்து விட்டு சர்வீஸ் ரோட்டோரம் உள்ள நடைபாதையில் சென்ற இரு பெண்கள் தடுமாறினர்; இவர்களை அருகிலிருந்த நபர்கள் மீட்டனர். நடைபாதையில் கால்வாயின் மேற்பரப்பில் மூடி இல்லாததால் மக்கள் அச்சத்துடன் சென்றனர்.
இதைத்தொடர்ந்து குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு குழாய் சேதம் அடைந்த சம்பவம் குறித்து தெரிவித்ததை தொடர்ந்து குடிநீர் செல்வது நிறுத்தப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதை சரி செய்தார்கள். தற்போது இதே பகுதியில் மீண்டும் சேதமடைந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இப்பகுதியில் இது போன்று குழாய் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
