/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம்; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
/
பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம்; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம்; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம்; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ADDED : செப் 23, 2024 10:48 PM

சுற்றுச்சுவர் சேதம்
உடுமலை யு.கே.சி., நகர் நகராட்சி துவக்கப்பள்ளி வளாக சுவர் சேதமடைந்து, கட்டப்படாமல் உள்ளது. இதனால், பள்ளிக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வித்துறையினர் பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
அதிக ஒளியால் பாதிப்பு
ஆனைமலையிலிருந்து பழநிசெல்லும், உடுமலை வழிதடத்தில், குறிச்சிக்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை முன், அதிகமான வெளிச்சத்துடன் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு, இரவு நேரங்களில் கண் கூசும் வகையில் வெளிச்சம் அடிப்பதால் தடுமாறுகின்றனர். இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேணி, உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, தளி ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்கள் ரோட்டோரத்தில் நடந்துசெல்வதற்கும் வழியில்லாமல் உள்ளது. கனரக வாகனங்கள் வரும்போது இரண்டு சக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்கும் இடமில்லாமல் உள்ளது.
- தங்கராஜ், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் இரவு தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையால் 'குடி'மகன்களும் ரோட்டில் நிலையில்லாமல் சுற்றுகின்றனர். பொதுமக்கள் இரவில் நடந்துசெல்வதற்கும் அச்சப்படுகின்றனர்.
- பாலகிருஷ்ணன், உடுமலை.
பயன்பாட்டுக்கு திறக்கணும்
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், நகராட்சியால் அமைக்கப்பட்ட நடைபாதை மேம்பாலம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உளளது. இதனால், பொதுமக்கள் ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, இதனை பயன்பாட்டுக்கு திறக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
ரோட்டை சீரமையுங்க!
உடுமலை- எலையமுத்துார் செல்லும் வழியில், ஆண்டியகவுண்டனுார் தாண்டியதும் அரை கி.மீ., துாரத்திற்கு தார்சாலை பள்ளங்களாக உள்ளது. இது வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறது. விபத்து ஏற்படும் முன் சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் செப்பனிட வேண்டும்.
- நாச்சிமுத்து.போடிபட்டி.
சேதமடைந்த மின்கம்பம்
பொள்ளாச்சி, இந்திரா நகர், வஞ்சியாபுரம் பிரிவில் ரோட்டோரத்தில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து, ஒரு வருடத்திற்கு முன்பாகவே புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை மின் கம்பம் மாற்றப்படவில்லை. மின்கம்பம் சாயும் முன், மின்வாரிய அதிகாரிகள் கவனித்து, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
- -குழந்தைவேலு, பொள்ளாச்சி.
ரோடு சேதம்
பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் ஊராட்சியில் ரோடுகள் மோசமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேர பயணத்தின் போது தடுமாறுகின்றனர். வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-- -மாசிலாமணி, சின்னாம்பாளையம்.
ஒளிராத தெருவிளக்குகள்
வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் மத்திய மருத்துவமனை செல்லும் ரோட்டில், தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், அவ்வழியில் செல்பவர்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் சிரமத்துடன் பயணிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து, தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.
- -கிரண், உருளிக்கல் எஸ்டேட்.
பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம்
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் ரோட்டில், குழி ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ் மற்றும் பிற வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-நந்தா, கிணத்துக்கடவு.
விதிமீறும் வாகனங்கள்
வால்பாறை நகை கடை வீதியில், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்வதால், நடந்து செல்லும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ரமேஷ், வால்பாறை.
தெருநாய்களால் விபத்து
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டும், விளையாடும் போதும் ரோட்டில் தாறுமாறாக ஓடுவதால், வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்க, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவேக், பொள்ளாச்சி.