ADDED : பிப் 06, 2025 08:49 PM

பொள்ளாச்சி; சேதமடைந்த அரசு பஸ் சீரமைக்கப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுவதால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து, பழநி, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு 'மப்சல்' பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில், டிஎன் 38 என் 3695 என்ற பதிவு எண் உள்ள பஸ், பொள்ளாச்சியில் இருந்து கோவை சிங்காநல்லுார், கரூர், திருச்சி மார்க்கமாக புதுக்கோட்டை சென்று திரும்புகிறது. தினமும், 700 கி.மீ., துாரம் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன், காங்கயம் பகுதியில், வாகனம் மோதி, பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. அதற்கான இழப்பீட்டு தொகை, அந்த வாகன ஓட்டுநரிடம் பெறப்பட்டு, பணிமனையில் செலுத்தப்பட்டும், சீரமைக்கப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
இதேபோல, பஸ்சில் முகப்பு விளக்கு பழுதானால், மாற்று பல்பு வழங்கப்படுவதில்லை எனவும், டிரைவர்கள், கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.
அரசு பஸ் ஊழியர்கள் கூறியதாவது: பணிமனைகளில், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி.எஸ்., 6 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில், ஏதேனும் பாகம் உடைந்தால் உரிய காலத்திற்குள் சீரமைப்பதில்லை.
பல பஸ்களில், முகப்பு விளக்கில் உள்ள பல்பு பழுதாகிறது. இதனை முறையாக மாற்றுவது கிடையாது. இதனால், அவரவர் சொந்த செலவில் கூடுதலாக எல்.இ.டி., பல்பு இணைத்தும் வருகின்றனர்.
புதிய பஸ்களை முறையாக பராமரித்தால் மட்டுமே நீண்ட காலம் உழைக்கும். பயணியரும் அரசு பஸ்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
