/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் வழித்தடங்களை ஒட்டிய ஆக்கிரமிப்புகளால் ஆபத்து
/
நீர் வழித்தடங்களை ஒட்டிய ஆக்கிரமிப்புகளால் ஆபத்து
ADDED : ஜூன் 08, 2025 10:37 PM

கோவை மாநகராட்சி வசம் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லுார் குளம், நரசாம்பதி, செல்வம்பதி உட்பட, 9 குளங்கள் உள்ளன. இக்குளங்களுக்கு நொய்யல், சங்கனுார், ராஜவாய்க்கால் என பல கிளைகளாக பிரிந்து தண்ணீர் செல்கிறது.
இவற்றையும் மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த நீர் வழித்தடங்களை ஒட்டிய கரைகளை ஆக்கிரமித்து, பொது மக்கள் ஆங்காங்கே வீடுகள் கட்டியுள்ளனர். குளக்கரைகளில் ஆக்கிரமிப்பு பெரும்பாலும் அகற்றப்பட்டு விட்டது.
அதேசமயம், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் இன்னும் உள்ளன. இவை, கரைகளை பராமரிப்பதற்கு இடையூறாக இருக்கின்றன.
மழை காலங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளால், அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தொடர்கதையாக உள்ளது. தற்காப்பு கருதி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டியதன் அவசியத்தை, பொதுமக்களும் உணராமல் இருப்பதுதான் வேதனை.
மேட்டுப்பாளையம் ரோடு, பிரபு நகர் அருகே சங்கனுார் வாய்க்காலை ஒட்டிய பகுதி, சிவானந்தா காலனி சங்கனுார் ஓடை அருகே, கவுண்டம்பாளையம் சங்கனுார் ஓடை அருகே, இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை காண முடிகிறது.
ஒண்டிப்புதுார் ரயில்வே மேம்பாலத்தை ஒட்டி செல்லும், நொய்யல் ஆற்றின் கரை அருகே, பொள்ளாச்சி மெயின் ரோடு ராஜவாய்க்கால் ஒட்டிய பகுதி, செல்வம்பதி குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் தெலுங்குபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில், வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
வேடபட்டி ரோடு, நரசாம்பதி குளத்தின் கரையிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாற்று நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
ரத்தினபுரி அருகே, சங்கனுார் வாய்க்காலை ஒட்டி கட்டப்பட்டிருந்த ஒரு வீடு, சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததை மறக்கமுடியாது.
இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் முன் அரசு விழித்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், மக்களும் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும்!