/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயல்படாத மொபைல் போன் டவரால் ஆபத்து
/
செயல்படாத மொபைல் போன் டவரால் ஆபத்து
ADDED : ஜூலை 29, 2025 08:34 PM

மேட்டுப்பாளையம்; ஆடி மாத காற்றில் வேகமாக அசைந்தாடும் செயல்படாமல் உள்ள மொபைல் போன் டவர், எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
சிறுமுகை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பாரதி நகரில், 150 மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதியின் மையப் பகுதியில் உள்ள, சாஸ்திரி வீதியில், 1999ம் ஆண்டு தனியார் மொபைல் போன் டவர் 80 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்த மொபைல் போன் நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை.
அதனால் மொபைல் போன் டவரை பராமரிக்காததால், டவர் அமைந்துள்ள வளாகத்தில் செடிகள், கொடிகள், மரங்கள் முளைத்து புதர் போல் காட்சி அளிக்கிறது. எனவே இந்த டவரை அகற்றும் படி, இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாரதி நகரில் உள்ள சாஸ்திரி வீதி பொதுமக்கள் கூறியதாவது: பாரதி நகரில் உள்ள டவர் அமைந்துள்ள இடத்தில் ஏராளமான பாம்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தற்போது ஆடி மாத காற்று, அதிக அளவில் வீசுகிறது. சுமார் 80 அடிக்கு மேல் உள்ள மொபைல் போன் டவர், காற்றில் அசைந்தாடும் போது, துருப்பிடித்துள்ள இந்த டவர் முறிந்து, அருகே உள்ள வீடுகளின் மீது விழுந்தால், வீடுகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இரவில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வீடுகளில் வசிப்பவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும். அருகே உள்ள மின் கம்பிகள் மீது விழுந்தாலும், பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
இந்த டவரை அகற்றும் படி தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர், இடத்தின் உரிமையாளருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த டவரை முழுமையாக அகற்றவில்லை என்றாலும், பாதி அளவிற்காவது கழற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகள், கொடிகளை சுத்தம் செய்து, வீடுகளுக்கு விஷ ஜந்துக்கள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமுகை நகரில் இன்னும் சில இடங்களில், இதுமாதிரி செயல்படாமல் மொபைல்போன் டவர்கள் உள்ளன. அதை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.