/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எரிந்த வேப்ப மரம் சாய்ந்தால் ஆபத்து
/
எரிந்த வேப்ப மரம் சாய்ந்தால் ஆபத்து
ADDED : டிச 01, 2025 04:56 AM

மேட்டுப்பாளையம்: சாலையின் ஓரத்தில் அடிப்பகுதி எரிந்த நிலையில் உள்ள வேப்ப மரத்தால் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை அருகே ஆலாங்கொம்பில், சாலையின் ஓரத்தில் உயர்ந்து வளர்ந்துள்ள, பெரிய வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தின் அருகே பொதுமக்கள் குப்பைகளை குவித்து வந்தனர். இந்த குப்பைகளுக்கு தீ வைத்ததால், மரத்தின் அடிப்பகுதி எரிந்தது.
தற்போது உயர்ந்து வளர்ந்துள்ள பெரிய மரத்தை, அதன் பக்கவாட்டில் உள்ள எரிந்த அடிப்பகுதி மரம் தாங்கி பிடித்துள்ளது. சிறுமுகை சாலை வழியாக, தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இவ்வழியாக காலை மாலையில், மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களும் செல்கின்றன. ஏராளமான பொதுமக்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வழியாக சென்று வருகின்றனர்.
வேப்ப மரத்தின் அடிப்பகுதி, முற்றிலும் எரிந்த நிலையில் இருப்பதால், வேகமாக காற்று அடித்தால், எந்த நேரத்திலும் மரம் அடியோடு முறிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மரத்தின் அருகே மின்சார கம்பிகள் உள்ள மின் கம்பம் உள்ளது. மழைக்காலத்தில் இம்மரம் முறிந்து விழும் பட்சத்தில், மின் கம்பமும் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அவ்வழியாக செல்லும் பஸ் மற்றும் பொதுமக்கள் மீது மரம் மற்றும் மின்கம்பம் விழுந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எரிந்த நிலையில் உள்ள வேப்ப மரத்தை வெட்ட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படுவதற்கு முன், நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

