/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹவுசிங் யூனிட் குடியிருப்பு கழிவு நீரால் அபாயம்! பாதையை மாற்றி அமைக்க கோரிக்கை
/
ஹவுசிங் யூனிட் குடியிருப்பு கழிவு நீரால் அபாயம்! பாதையை மாற்றி அமைக்க கோரிக்கை
ஹவுசிங் யூனிட் குடியிருப்பு கழிவு நீரால் அபாயம்! பாதையை மாற்றி அமைக்க கோரிக்கை
ஹவுசிங் யூனிட் குடியிருப்பு கழிவு நீரால் அபாயம்! பாதையை மாற்றி அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 11:28 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, 1800 ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளின் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் விவேகானந்தபுரம், கழிவு நீர் வாய்க்காலில் இணைக்கப்படுவதால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் பரவி, சுற்றுச்சூழல் பாதிப்பதோடு சுகாதார கேடு ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18வது வார்டு, அத்திப்பாளையம் செல்லும் ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சிறப்பு திட்ட கோட்டம் மூன்றின்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் சார்பில், 10.81 ஏக்கர் பரப்பில், 1800 குடியிருப்புகள் தலா, 399 சதுர அடிகள் பரப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு, 1800 வீடுகளும், பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தற்போது மின் இணைப்பு, கழிவு நீர் செல்ல வாய்க்கால் வெட்டும் பணி உள்ளிட்ட சில அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன.
இதில், 1800 வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் குழாயில் கொண்டு வரப்பட்டு, விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் சேர்க்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,' தற்போது, 1800 வீடுகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், ரயில்வே பாலத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீருடன் கலந்து, தற்போது திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் கீழ்புறமாக கொண்டு வர இயலாது. இத்திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் இதுவரை அனுமதி எதுவும் வழங்கவில்லை.
நோய் பரவும்
ஏற்கனவே ரயில்வே பாலத்தை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வெளியேற ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சிறிய சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டு, அதில் கொண்டு செல்லப்படுகிறது.
1800 வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஏற்கனவே உள்ள சிறிய சிமெண்ட் பாதை வழியாக கொண்டு செல்ல முடியாது.
அவ்வாறு கொண்டு செல்ல முயற்சித்தாலும், அவை ரயில்வே பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், குப்பிச்சிபாளையம் ரோடு, ஜே.கே.நகர், கஸ்தூரிபாளையத்திற்கு செல்லும் பாதை, விவேகானந்தபுரம், கங்குவார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரக் குறைவை ஏற்படுத்தும். இதனால் நோய் பரவும் அச்சம் ஏற்படலாம்.
இதனால் பெரும் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது ஹவுஸிங் யூனிட் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ஹவுசிங் யூனிட் பகுதியின் கிழக்கு புறத்தில் உள்ள பள்ளவாரியை ஒட்டி உள்ள பகுதியில் குழாய் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
இது குறித்து, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் கூறுகையில், இந்த பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.