/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் காத்திருக்கும் ஆபத்து! வாகன ஓட்டுநர்கள் திக்திக் பயணம்
/
மேம்பாலத்தில் காத்திருக்கும் ஆபத்து! வாகன ஓட்டுநர்கள் திக்திக் பயணம்
மேம்பாலத்தில் காத்திருக்கும் ஆபத்து! வாகன ஓட்டுநர்கள் திக்திக் பயணம்
மேம்பாலத்தில் காத்திருக்கும் ஆபத்து! வாகன ஓட்டுநர்கள் திக்திக் பயணம்
ADDED : அக் 28, 2024 11:34 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பராமரிப்பு பணிகள் பாதியிலேயே நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடான, பொள்ளாச்சி --- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி -- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு வாயிலாக, 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம், கடந்த, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன.
வாகனங்கள் வேகமாக செல்லும் போது, அதிர்ந்து சப்தம் எழுப்புவதுடன், விபத்துகளை ஏற்படுத்தும் அபாயமும் இருந்தது.
இந்நிலையில், கடந்த, 15ம் தேதி சேதமடைந்த இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் முழு அளவில் முடியாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரும்பு சட்டம் பெயர்ந்து நிற்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பாலத்தில் இரும்பு சட்டங்கள் நான்கு இடங்களில் சீரமைக்கும் பணி மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஒரு வாரம் மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை அடைத்து பணி நடந்தது. ஆனால், மூன்று பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதான வழித்தடம் என்பதால், போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, போர்க்கால அடிப்படையில் பணி மேற்கொள்ளாமல், பெயர்ந்த இரும்பு கம்பிகளை அகற்றி, மண் மூட்டைகளை அடுக்கினர். அதன்பின், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், வாகனங்கள் செல்லும் போது, மண் மூட்டைகள் உடைந்து, ஓடுதளம் முழுவதும் மண் பரவியுள்ளது.
இதனால், பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து வெளியே தெரிவதால், வாகனங்கள் பழுதாகும் நிலை உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. சீரமைப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். இல்லையெனில் தற்காலிக சீரமைப்பு பணிகளாவது மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, கூறினர்.