/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆபத்தான கட்டடங்கள்; அதிகாரிகள் அலட்சியம்!
/
ஆபத்தான கட்டடங்கள்; அதிகாரிகள் அலட்சியம்!
ADDED : ஜூலை 23, 2025 09:12 PM
பொ துமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் பராமரிப்பிலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதிலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், சார்பதிவாளர் அலுவலகம், கிளைச்சிறை, நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளன. இங்கு வரும் மக்களுக்கு, கழிப்பறை வசதியில்லை. இங்குள்ள கழிப்பறை முறையாக பராமரிக்காமல், சிதிலமடைந்து காணப்படுவதால், திறந்தவெளி கழிப்பிடமாக மாறி, சுகாதார கேடு ஏற்படுகிறது.
வாகனங்கள் நிறுத்தும் பகுதியில், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் அலுவலர் குடியிருப்பும், ஓய்வூதியர் கட்டடமும் பழுதடைந்து காணப்படுகிறது. சிவில் சப்ளை, சர்வேயர் அலுவலகங்கள் உள்ள கட்டடத்தில் செடிகள் முளைத்து, ஆபத்தான நிலையில் உள்ளது.
பொதுமக்கள் அமரும் இருக்கைகள், துாய்மைப்படுத்தப்படாமல் உள்ளது. இதே அலுவலக வளாகத்திலுள்ள புள்ளியியல் துறை கட்டடம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டடங்கள், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
பஸ் ஸ்டாண்ட் அருகே, சர்வேயர் குடியிருப்பு கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல், புதர் மண்டியும், சிதிலமடைந்தும் வீணாகிறது. கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நுாறு ஆண்டு பழமையான கட்டடம், பராமரிக்காததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலகங்கள் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளன. சில கிராமங்களில், தற்காலிக கட்டடங்களில் செயல்படுகின்றன. வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பி காத்திருக்கின்றனர்.
மேலும், சில கிராமங்களில், ரேஷன் கடைகள் பராமரிப்பின்றி, தற்காலிக கட்டடங்களில் செயல்படுகின்றன. இந்த கட்டடங்களை கணக்கெடுத்து புதுப்பிக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அலுவலகங்கள் அனைத்தும், பொதுப்பணித்துறை (கட்டுமானங்கள்) பிரிவினர் பராமரிக்க வேண்டும். பழுதான கட்டடங்கள் குறித்து அறிக்கை வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.