UPDATED : நவ 02, 2026 04:05 PM
ADDED : நவ 02, 2026 04:02 PM

சூலூர்: முதலிபாளையம் பிரிவில், விபத்தை ஏற்படுத்தும் குழியை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு ஆறு வழிச்சாலையில், முதலிபாளையம் பிரிவு, செங்கோட கவுண்டன் புதூர் பிரிவில், ரோட்டை கடக்க, இரும்பிலான ஏணி பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக, இரு பிரிவுகளிலும், அவிநாசி ரோட்டின் சர்வீஸ் ரோட்டை ஒட்டி, வடபுறம் மற்றும் தென்புறம் பெரிய குழிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஊழியர்கள் தோண்டினர்.
ஏணிப்பாலம் அமைக்க, முதலிபாளையம் மற்றும் செங்கோட கவுண்டன் புதூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, குழிகள் தோண்டியதோடு பணிகள் நிறுத்தப்பட்டன.
மூன்று மாதங்களாக குழிகள் மூடப்படாததால், சர்வீஸ் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து முதலிபாளையம் பிரிவு மக்கள் கூறியதாவது :
இரு பிரிவுகளிலும் மூன்று மாதங்களுக்கு முன் தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மூடப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த வாரத்தில் இரவு நேரத்தில் மழை பெய்தபோது, குழி இருப்பது தெரியாமல், பைக்கில் சென்ற வாலிபர், குழிக்குள் விழுந்துவிட்டார். பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, காயங்களுடன் அவர் மீட்கப்பட்டார். இதேபோல், பலரும் விபத்துக்குள்ளாகி யுள்ளனர். உடனடியாக குழியை மூட நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
