/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை நடமாடும் பகுதியில் கும்மிருட்டு; தெருவிளக்கு கேட்டு மக்கள் காத்திருப்பு
/
யானை நடமாடும் பகுதியில் கும்மிருட்டு; தெருவிளக்கு கேட்டு மக்கள் காத்திருப்பு
யானை நடமாடும் பகுதியில் கும்மிருட்டு; தெருவிளக்கு கேட்டு மக்கள் காத்திருப்பு
யானை நடமாடும் பகுதியில் கும்மிருட்டு; தெருவிளக்கு கேட்டு மக்கள் காத்திருப்பு
ADDED : ஆக 20, 2025 09:47 PM

தொண்டாமுத்தூர்; கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பழைய பச்சான்வயல்பதி, புதிய பச்சான்வயல்பதி, சவுக்காடுபதி ஆகிய மூன்று மலை கிராமங்கள் உள்ளன. அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை யானைதான்.
60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மூன்று மலை கிராமங்களிலும், மாலை, 3:00 மணிக்கு மேல், காட்டு யானைகள் நடமாட்டம் துவங்கி விடுகிறது.
பழைய பச்சான்வயல்பதி, சவுக்காடுபதியில், தெரு விளக்குகள் பழுதடைந்து, அதனை சரிசெய்யாமல் உள்ளதால், நீண்ட நாட்களாக, வனவிலங்குகளின் நடமாட்டம் நிறைந்த பகுதியில், இருளில் இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
உடைந்த தண்ணீர் தொட்டி சவுக்காடுபதியில், நேரடியாக ஆற்று நீரையே, மலைவாழ் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், இப்பகு தியில், போர்வெல் நீர் வினியோகிக்கப்படுகிறது.
அந்த நீரை சேமிப்பதற்காக, 1,000 லிட்டர் பிளாஸ்டிக் டேங்க் வைக்கப்பட்டது. அந்த டேங்க் உடைந்த நிலையில், வேறு டேங்க் வைக்காததால், 500 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் வைத்து, மலைவாழ் மக்கள் நீரை சேமிக்கின்றனர்.
இந்த மூன்று கிராமங்களுக்கும், 21 அடி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ் வசதி இல்லை. அவசர மருத்துவ உதவிக்கு கூட, சவுக்காடுபதி மக்கள், 7 கி.மீ., தொலைவும், பச்சான்வயல்பதி மக்கள், 6 கி.மீ., தொலைவும் நடந்து சென்று, நரசீபுரத்திலேயே பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது.
கழிப்பறை வசதி இல்லை இந்த மூன்று கிராமங்களிலும், கழிப்பறை வசதிகள் இல்லாததால், திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். காலைக்கடன் கழிக்க செல்லும்போது, எப்போது யானை வருமோ என்ற அச்சத்திலேயே செல்ல வேண்டியுள்ளதாக, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சவுக்காடுபதியில், கடந்த மாதம், துணி துவைக்க சென்ற, செல்வி, 23 என்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், கழிப்பறை, பஸ் வசதி, தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்தே வாழ்ந்து வருவதாகவும், பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த பயனும் இல்லை எனவும், கண்ணீர் வடிக்கின்றனர்.