/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாமனார், மாமியார் மீது போலீசில் மருமகள் புகார்
/
மாமனார், மாமியார் மீது போலீசில் மருமகள் புகார்
ADDED : டிச 15, 2024 11:58 PM
கோவை; போலி ஆவணம் தயார் செய்து தனது கணவர் நிலத்தை அபகரித்ததாக மாமனார், மாமியார் மீது மருமகள், போலீசில் புகார் அளித்தார்.
கோவை, சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சுமதி, 60. இவரின் கணவர் பெயரில் உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மாமனார், மாமியார் அபகரித்துவிட்டதாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எனது கணவர் செல்வராஜ் கடந்த 1991ம் ஆண்டு இருகூரில், 1.23 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் கிரையம் செய்தார். அவர் 2005ம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இந்த நிலத்தின் ஆவணங்களை எங்களுக்கு தெரியாமல், என் கணவரின் தந்தை ராமசாமி எடுத்துச்சென்றுள்ளார். அதை வைத்து, போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை அவரின் மனைவி அம்மாசையம்மாள் பெயருக்கு, தான செட்டில்மென்ட் செய்துள்ளார்.
பின்னர், அவர்கள் பொது அதிகாரம் பெற்ற முகவர்கள் வாயிலாக, எங்கள் நிலத்தில் இருந்து 8 சென்ட் இடத்தை, வேறு ஒருவருக்கு கிரையம் செய்துள்ளனர். எனக்கு சேர வேண்டிய இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.