/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
/
காரமடை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : டிச 07, 2024 05:48 AM

மேட்டுப்பாளையம்; காரமடை தெப்பக்குளத்தில் கடந்த 3 நாட்களாக மீன்கள் செத்து மிதந்து வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
காரமடை தெப்பக்குளத்தில் நீராடினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தேர்த்திருவிழாவின் இறுதி நாளில், தெப்பத் திருவிழா தீர்த்தவாரி என்கிற உற்சவம் நடைபெறும்.
அண்மையில், காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், இந்த தெப்பக்குளத்தில் உள்ள நீரூற்று பெருக்கெடுத்து, பல ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினமும் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
நேற்று அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் தெப்பக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் புனித நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஹிந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன் கூறுகையில், '' மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, இதற்கு தீர்வு காண வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை நீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என ஒரு விதி உள்ளது. ஆண்டுதோறும் நீரை ஆய்வை செய்ய வேண்டும்,'' என்றார்.
இதுகுறித்து காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி கூறுகையில், ''மீன்கள் செத்தது தொடர்பாக மீன் வளத்துறையில் இருந்து அதிகாரி வந்து ஆய்வு மேற்கொண்டார். மீன்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்றார்.
மீன்வளத்துறையின் அறிவுறுத்தல் படி அரிசி தவிடு, கடலை புண்ணாக்கு உள்ளிட்ட உணவுகள் குளத்தில் போடப்பட்டன. இருப்பினும் மீன்கள் இறந்துள்ளன. குளத்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.---