/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளுக்கு அவகாசம்... அவ்ளோதான்! 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்
/
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளுக்கு அவகாசம்... அவ்ளோதான்! 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளுக்கு அவகாசம்... அவ்ளோதான்! 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளுக்கு அவகாசம்... அவ்ளோதான்! 3 மாதத்துக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : அக் 01, 2024 11:11 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள், மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி -- மடத்துக்குளம், 50.07 கி.மீ.,; மடத்துக்குளம் ---- ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ.,; ஒட்டன்சத்திரம் --- கமலாபுரம், 36.51 கி.மீ., என, மொத்தம், 131.96 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கப்படுகிறது.
அதில், 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமைகிறது. இந்த பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டது.
நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பகுதியில், தென்னை மரங்களை வெட்டி அகற்றுதல் மற்றும் கட்டடம் இடிக்கும் பணிகளுடன், மேம்பால பணிகளிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொஞ்சம் சுணக்கம்
ஆச்சிப்பட்டி அருகே, 2.16 கி.மீ.,க்கு தென்னை மரங்கள், கட்டடங்கள் அகற்றப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டு, சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது, பால பணிகள் மந்தமாக நடக்கிறது. இதே போன்று, ஆச்சிப்பட்டி - புளியம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பாலங்கள் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மேலும், ஆங்காங்கே ரோடு பணிகளும் முழுமை பெறாமல் உள்ளன.
இப்பணிகள் முழுமை பெறாத சூழலில், ஒரு சிலர் இந்த ரோட்டை தற்போது, மது குடிக்கும் இடமாக மாற்றி, ஆங்காங்கே ரோட்டோரம் மதுபாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், பயனாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அறிவிப்பு வச்சாச்சு
பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவோர், கோவை, கொச்சி, மைசூரு செல்லும் வழித்தடங்களை அறியும் வகையில், எவ்வளவு கி.மீ., துாரம் உள்ளிட்ட விபரங்களுடன் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, கோவை, பொள்ளாச்சி வழியாக செல்லும் பயணியர், பழநி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழித்தடம், பயண துாரம் உள்ளிட்ட விபரங்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கால அவகாசம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்வோர், சர்வீஸ் ரோடு வழியாக பாலத்தின் கீழே சுற்றிச் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
சர்வீஸ் ரோடு அமைத்து, போக்குவரத்து மாற்றம் செய்த பின், கான்கிரீட் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது.
ரோடு பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளன. பாலம் இணைப்பு பணிகள் மட்டும் உள்ளன. அந்த பணிகளும் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
இப்பணிகளை நிறைவு செய்ய டிச., மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் பணிகளை முடித்து,ஜன.,க்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணிகள் முடிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.