/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விரிவாக்கத்துக்காக 190 கடைகள் இடிக்க முடிவு
/
சாலை விரிவாக்கத்துக்காக 190 கடைகள் இடிக்க முடிவு
ADDED : அக் 13, 2025 12:02 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம்-அவிநாசி இரு வழி சாலை, தற்போது நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக மேட்டுப்பாளையம் நகரில் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக, 190க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்க, அளவீடு செய்து, மார்க் செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகள் எப்போது இடிப்பார்கள் என்ற கேள்வி, உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு, 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. சாலையின் இரு பக்கம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை, 20 மீட்டர் அகலத்திற்கு, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் ஏழு இடங்களில் பெரிய பாலங்களும், ஒன்பது இடங்களில் குழாய் பாலங்களும் புதிதாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மேட்டுப்பாளையம் நகரில் அன்னூர் சாலையை, 20 மீட்டருக்கு அகலப்படுத்த, சாலையின் இருபக்கம் அளவீடுகள் செய்து, மார்க் செய்யப்பட்டுள்ளன. இதில், 160 நபர்களுக்கு சொந்தமான, 190-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடை உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும். மேலும் அன்னூர் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். இதனால் ஒரு பக்கம் சாலை விரிவாக்கம் நடைபெறாமல் உள்ளது. இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறுகையில்,' நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, கடைகளின் சுவர்களில் மார்க் செய்துள்ளனர். இந்த கடைகளை எப்போது இடிப்பார்கள் என்ற விபரம், இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும், இடத்திற்கான இழப்பீடு தொகை எவ்வளவு வழங்குவார்கள் என்ற விவரமும், இதுவரை ஏதும் அறிவிக்கவில்லை. எனவே அரசு அதிகாரிகள், கடை உரிமையாளர்களை அழைத்து, இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தி, எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து, விபரங்களை தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.