/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பம்ப், மோட்டார் விலையை 15 சதவீதம் உயர்த்த முடிவு
/
பம்ப், மோட்டார் விலையை 15 சதவீதம் உயர்த்த முடிவு
ADDED : ஏப் 07, 2025 01:37 AM
கோவை: மூலப்பொருள் விலை உயர்வு, கூலி, மின் கட்டண உயர்வு காரணமாக, மோட்டார், பம்ப்களின் விலை 15 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக, கோவை பம்ப் செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கமான கோப்மா தெரிவித்துள்ளது.
மோட்டார், பம்ப்களின் தலைநகரம் என புகழப்படும் கோவையில், 600 பம்ப், மோட்டார் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இதில், 500க்கும் மேற்பட்டவை குறு, சிறு நிறுவனங்கள். இந்தியாவின் மொத்த மோட்டார், பம்ப் உற்பத்தியில் கோவையின் பங்களிப்பு 40 சதவீதம். தினமும் சராசரியாக 35,000 பம்ப்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மோட்டார், பம்ப் விலையில் 15 சதவீதத்தை உயர்த்த முடிவு செய்திருப்பதாக, கோவை பம்ப் செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கமான கோப்மா தெரிவித்துள்ளது.
கோப்மா தலைவர் மணிராஜ் கூறியதாவது:
பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டுமெனில், ஓரளவு லாபம் வேண்டும். ஆனால், நிலைமை மோசமாக உள்ளது. மூலப்பொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலை, 25 -- 100 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
'ஸ்டாம்பிங், காப்பர்' விலை அதிகரித்துள்ளது. ஸ்டீல் பைப் விலை கிலோவுக்கு 90ல் இருந்து 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. பேஸ் அயர்ன் விலை, 60ல் இருந்து 90 ஆக உயர்ந்துள்ளது. விலை ஏற்றத்தாழ்வை சமாளிக்க மூலப்பொருள் வங்கி கேட்டோம். மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. எங்களின் எந்த போராட்டம், கோரிக்கைகளுக்கும் அரசுகள் செவிகொடுப்பதாக இல்லை.
வழக்கமாக கோடையில் மோட்டார், பம்ப்களுக்கான தேவை அதிகரிக்கும். இதுதான் எங்களின் சீசன். ஆனாலும், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு ஆர்டர் இன்றி உள்ளோம். மின் கட்டணம் எங்களை வதைக்கிறது.
எனவே, மோட்டார், பம்ப்களின் விலையை 15 சதவீதம் உயர்த்த சங்க செயற்குழுவில் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

