/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரன்முறை செய்யாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு
/
வரன்முறை செய்யாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு
வரன்முறை செய்யாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு
வரன்முறை செய்யாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு
ADDED : செப் 22, 2024 05:28 AM
கோவை, : கோவை நகரப் பகுதியில், அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளில், வரன்முறை செய்யாமல் வீடு கட்டியிருப்போருக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை நகர பகுதியில், அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளில் ஏராளமானோர் இடம் வாங்கி, வீடு கட்டி வசிக்கின்றனர். இம்மனைப்பிரிவுகளில் உள்ளாட்சி அமைப்புகளால் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அதனால், அப்பகுதியில் வசித்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதன்பின், வரன்முறை செய்யாத கட்டடங்களுக்கு அபராதத்துடன் சொத்து வரி விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது.
தற்போது அக்கட்டடங்களையும் வரன்முறை செய்துகொள்ள தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
நகர ஊரமைப்புத்துறையில் விண்ணப்பித்து, கட்டட வரைபட அனுமதி பெற்று, வரன்முறை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வீடு கட்டியிருக்கும் பலர் இன்னும் வரன்முறை செய்யாமல் இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தீர்வு காண, மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக, பொறியியல் பிரிவு மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகளுடன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆலோசித்தார்.
சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியிருப்பவர்கள் மற்றும் வீடு கட்டியிருப்பவர்கள், வரன்முறை செய்து கொள்ள அவகாசம் இருக்கிறது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை நிலுவையின்றி செலுத்தினால், குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.