/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விலை குறைத்தும் விற்பனை மந்தம் கால்நடை ஆபரணங்கள் விற்போர் கவலை
/
விலை குறைத்தும் விற்பனை மந்தம் கால்நடை ஆபரணங்கள் விற்போர் கவலை
விலை குறைத்தும் விற்பனை மந்தம் கால்நடை ஆபரணங்கள் விற்போர் கவலை
விலை குறைத்தும் விற்பனை மந்தம் கால்நடை ஆபரணங்கள் விற்போர் கவலை
ADDED : ஜன 11, 2024 11:55 PM

பொள்ளாச்சி;'பொள்ளாச்சியில், மாடுகளுக்கான ஆபரணங்கள் கடந்தாண்டை விட விலை குறைத்தும் விற்பனை மந்தமாக உள்ளது,' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளதால், பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உழவுக்கும், விவசாயத்துக்கும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை வழிபடும் வகையில், மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாடுகளுக்கு தேவையான ஆபரணங்களை அணிவித்து அலங்கரித்து, 'பட்டிப்பொங்கல்' கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியுள்ள நிலையில், மாட்டு சந்தை அருகே மார்க்கெட் ரோட்டில் மாடுகளுக்கு தேவையான ஆபரணங்கள், கயிறுகள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
கலர், கலராக சாட்டைகள், மூக்கனாங்கயிறு, ரேஸ் மாடுகளுக்கான ஆபரணங்கள் என பல வண்ணங்களில் வைக்கப்பட்டு இருந்தன. எனினும், விற்பனை சூடுபிடிக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மூக்கனாங்கயிறு, 20 - 250 ரூபாய்; ரேஸ் வண்டிகளுக்கான ஆபரணங்கள், 900 - 1,200 ரூபாய்; மணிகள் (12 மணிகள் உள்ளது), 600 ரூபாய்; சாட்டை ஒன்று, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே வியாபாரம் களை கட்டும். ஆனால், இந்தாண்டு இதுவரை வியாபாரம் மந்தமாக உள்ளது. பொங்கல் பண்டிகை சந்தை இன்று (நேற்று) நடந்தாலும், வியாபாரம் சுமாராக உள்ளது.
திமிழில் இருந்து மாடுகளுக்கு கட்டப்படும் மாரப்பு என்ற ஆபரணம் கடந்தாண்டு, 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 600 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மற்ற பொருட்கள் விலையும் குறைந்துள்ளது. விலை குறைத்தும் வியாபாரம் மந்தமாக உள்ளது. பருவமழை பொய்த்தது, விளை பொருட்களுக்கு விலை இல்லாதது போன்ற காரணங்களால் விற்பனை மந்தமாக இருக்கலாம்.
இவ்வாறு, கூறினர்.