/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் தொய்வு; சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 28, 2025 11:36 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் இடிகரை ரோட்டில் என்.ஜி.ஜி.ஒ., காலனியில் புதிய ரயில்வே மேம்பால பணிகள், மெதுவாக நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சி என்.ஜி.ஜி.ஒ., காலனி லெவல் கிராஸ்சிங்கை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. கோவை மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயில் தினமும், 10 முறை கடந்து செல்வதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் இந்த லெவல் கிராஸ் வழியாக இடிகரை, கோவில்பாளையம் சென்று அங்கிருந்து சத்தி ரோடு வழியாக அன்னூர், அவினாசி, திருப்பூர் செல்லலாம். இந்த லெவல் கிராசிங்கில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம், 32 கோடி ரூபாய் செலவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
மேம்பாலம் கட்டுமான பணிக்காக கடந்த டிச., 23ம் தேதி என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட் மூடப்பட்டது. மூடியவுடன் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆறு மாதத்தில் இதுவரை, 6 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ரயில்வே துறையும், மாநில நெடுஞ்சாலை துறையும் மேம்பாலம் கட்டுமான பணியில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதால், பாலத்தை முழுமையாக கட்டி முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' ரயில்வே மேம்பாலம் கட்ட என்.ஜி.ஜி.ஒ., காலனி ரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது செங்காளிபாளையம், இடிகரை, வையம்பாளையம், அத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், எஸ்.எம்.நகர்., சாலை வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட் ரோடு வழியாக துடியலூர் அடைந்து கோவை செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனாலும், பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாகவும், குறுகலாகவும் இருப்பதால் பெரும் சிரமம் உள்ளது.
இதே போல கோவையில் இருந்து வரும் வாகனங்கள், என்.ஜி.ஜி.ஒ., காலனியில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி வழியாக அம்மன் நகர் பின்புறம் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சென்று, செங்காளிபாளையத்தை அடைந்து இடிகரை, அத்திப்பாளையம், வையம்பாளையம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அம்மன் நகர் பின்புறம் உள்ள மயானம் அருகே உள்ள ரோடு குறுகலாகவும் மழைக்காலத்தில் வாகனங்கள், குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாலை அமைக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரயில்வே பாலம் கட்டுமானம் பணி முடிய, 3 ஆண்டு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாற்றுப்பாதையை செப்பனிட்டு வாகனங்கள் தாராளமாக சென்று வர, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.