சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு
சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு
UPDATED : மார் 20, 2026 03:07 PM
ADDED : மார் 20, 2026 01:41 AM

கோவை: ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குருவிற்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை நீக்க நக்கீரன் ஊடகத்திற்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளை குறித்து, நக்கீரன் ஊடகம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், அந்த அவதூறு செய்திகளை நீக்கவும், இது போன்ற செய்திகளை இனி வெளியிடுவதை தடுக்க கோரியும், ஈஷா அறக்கட்டளை சார்பில், டில்லி ஐகோர்ட்டில் கடந்த 2024ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதோடு, ஈஷா அறக்கட்டளை சார்பில், இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், உத்தரவை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, டில்லி ஐகோர்ட் நேற்று இடைக்கால உத்தரவிட்டது. அதில், ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குரு குறித்து நக்கீரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை நீக்க உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லி ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை நாங்கள் மனதார வரவேற்கிறோம். சில ஊடகங்களும், தனி நபர்களும் எவ்வித ஆதாரமுமின்றி, பொதுமக்களை தவறாக வழி நடத்தும் நோக்கில் திட்டமிட்டு தொடர்ந்து பொய்யான மற்றும் அவதுாறான குற்றச்சாட்டுகளை பரப்புவது துரதிர்ஷ்டவசமானது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈஷா அறக்கட்டளை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நல் வாழ்விற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. இத்தகைய நற்பணிகளை சீர்குலைக்கவே, இந்த திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது ஈஷா தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். எந்த ஒரு அவதுாறும் அல்லது திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களும் மனித நலனுக்கான எங்களின் செயல்களை தடுத்து நிறுத்தாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

