குடோனில் ‘ப்ளூடூத்’ முறையில் எடை போட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வழங்க கோரிக்கை
குடோனில் ‘ப்ளூடூத்’ முறையில் எடை போட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வழங்க கோரிக்கை
ADDED : செப் 25, 2026 08:43 PM
கோவை: வடகோவை சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தில் இணைந்தனர். இதற்கான விழாவில், மாநிலத் தலைவர் ராஜேந்திரன் பேசினார்.
நிறைவேற்றிய தீர்மானங்கள்:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். -தாயுமானவர் திட்டத்தில் சிக்கல்களை களைய வேண்டும். இத்திட்டத்துக்கான ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, ஊக்கத்தொகையை 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
கழிப்பிட வசதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகமாக வசிப்பதால், பொருட்கள் 100 சதவீதம் ஒதுக்க வேண்டும்.
குடோனில் இருந்து கடைகளுக்கு குறைவாக பொருட்கள் வருகின்றன. கடைகளில் இருப்பு குறைவு ஏற்பட்டதால், கண்காணிக்க வேண்டிய அதிகாரிக்கும் சேர்த்து அபராதம் விதிக்க வேண்டும்.
கார்டுதாரர்களுக்கு ‘ப்ளூடூத்’ முறையில் பொருட்கள் எடை போட்டு வழங்கப்படுகிறது. இதேபோல், ரேஷன் கடைகளுக்கும் குடோனில் இருந்து ப்ளுடூத் இணைப்பு மூலம் எடை போட்டு பொருட்கள் அனுப்ப வேண்டும்.
ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். 800 கார்டுக்கு ஒரு கடை அமைக்க வேண்டும்.
அனைத்து கடைக்கும் கட்டுநர் நியமிக்க வேண்டும் அல்லது உதவியாளர் நியமிக்க ரூ.6,000 கூடுதலாக வழங்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
