/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆளுங்கட்சி துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஆளுங்கட்சி துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 13, 2024 01:41 AM

அன்னுார்;அதிகாரிகளை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய, ஆளுங்கட்சி துணை சேர்மன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில், ஆளும் கட்சி ஒன்றிய துணை சேர்மன் தீனதயாளன், அனைத்து ஊழியர்களையும் கடுமையாக மிரட்டுவது, அவமதிப்பது, சுயலாபத்திற்காக விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட வைப்பது என செயல்பட்டு வருகிறார்.
மேலும் விதிமுறைக்கு மாறாக செயல்பட மறுத்த அலுவலர்களை ஒன்றிய அலுவலகத்திற்குள் பூட்டி வைத்து இரவு முழுவதும் தவிக்க விட்டுள்ளார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய துணை சேர்மன் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதன்படி அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், ஒன்றிய துணை சேர்மன் தீனதயாளன், முதல் முறை அலுவலர்கள் உள்ளே இல்லாத போது அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதிகாரிகள் இதை பொருட்படுத்தவில்லை.
நேற்று முன்தினம் அலுவலர்களை உள்ளே வைத்து பூட்டி உள்ளார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் வட்டாரத் தலைவர் பிரபுராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பீர்முகமது, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

