/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செய்த வேலைக்கு சம்பளம் தர மறுப்பு: கிராம சபை தணிக்கை கூட்டத்தில் சரமாரி புகார்
/
செய்த வேலைக்கு சம்பளம் தர மறுப்பு: கிராம சபை தணிக்கை கூட்டத்தில் சரமாரி புகார்
செய்த வேலைக்கு சம்பளம் தர மறுப்பு: கிராம சபை தணிக்கை கூட்டத்தில் சரமாரி புகார்
செய்த வேலைக்கு சம்பளம் தர மறுப்பு: கிராம சபை தணிக்கை கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : பிப் 18, 2024 10:48 PM

பெ.நா.பாளையம்;அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடந்த, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என, தொழிலாளர்கள் கிராம சபை சமூக தணிக்கை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கடந்த, 2022 - 23ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை தொடர்பாக, பொதுமக்களிடம் ஒப்புதல் பெற, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அசோகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தராம் முன்னிலை வகித்தனர். இதில், ஊராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடந்த, 100 நாள் வேலை திட்ட அறிக்கை, அது தொடர்பான சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பலர், எங்களில் பலருக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால், எவ்வித பதிலும் இல்லை. செய்த வேலைக்கு சம்பளம் தர மறுக்கின்றனர். சம்பளத்தை உடனடியாக தர வேண்டும்.
மேலும், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதையும் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக தணிக்கை தொடர்பான அறிக்கை ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ, ஒன்றிய அலுவலகத்திலோ, பொது நூலகத்திலோ வைக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், சமூக தணிக்கை அறிக்கை எங்கும் வைக்கப்படவில்லை. மக்கள் பார்வைக்கு வைக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய 100 நாள் வேலை திட்ட அதிகாரிகள், அரசு நிர்ணயம் செய்த சட்ட விதிகளின்படியே ஒவ்வொருவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலை, 9.00 மணியிலிருந்து மாலை, 5.00 மணி வரை நிர்ணயம் செய்யப்பட்ட பணியை முழுமையாக முடிப்பவர்களுக்கு மட்டுமே, முழுமையான சம்பளம் வழங்கப்படும்.
வேலை செய்யும் நேரம் மற்றும் பணியை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். இதில் பாரபட்சம் இல்லை.
சமூக தணிக்கை அறிக்கை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

