ADDED : ஏப் 21, 2025 09:04 PM

கருமத்தம்பட்டி, ; கருமத்தம்பட்டி சுற்றுவட்டார விதைப்பண்ணைகளில் வேளாண் துணை இயக்குனர் புனிதா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை வேளாண் துணை இயக்குனர் புனிதா, சோமனூர் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்தார். நடப்பாண்டு கரீப் பருவத்திற்கு, சூலூர் வட்டாரத்துக்கு வழங்கப்பட்ட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், சிறுதானிய இயக்கம், விதை கிராம திட்டம், பாரம்பரிய வேளாண் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். தேவையான விதைகள், உயிர் உரங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிரியல் காரணிகளை இருப்பு வைக்க, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கணியூர் கிராமத்தில் விவசாயி நடராஜன் மற்றும் குளத்துப்பாளையம் மதியழகன் தோட்டத்தில் அமைக்கப்பட்ட சோளம் கே 12 விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார். போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தினார். மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் திட்ட ஆலோசகர், சூலூர் வட்டார வேளாண் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.