/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை நோய்; விழிப்புணர்வு தேவை
/
சர்க்கரை நோய்; விழிப்புணர்வு தேவை
ADDED : நவ 13, 2025 09:48 PM

உ லகின் நான்காவது பொருளாதார நாடு இந்தியா... பொருளாதார ரீதியாக பெரிய இலக்கை வைத்து முன்னேறிக்கொண்டு இருக்கும் நம் நாட்டிற்கு பெரிய அபாயமாக உருவெடுத்து இருப்பது சர்க்கரை பாதிப்பு. உலகளவில் சர்க்கரை நோயின் தலைநகரமாக நம் நாடு குறிப்பிடப்படுகிறது. இதில், ஒருங்கிணைந்த விழிப்புணர்வு, நடவடிக்கை அவசியமாகியுள்ளது.
தேசிய சுகாதார திட்ட புள்ளிவிபரங்களின் படி, இந்தியாவில் சுமார், 10 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வியல், உணவு பழக்கவழக்கங்களின் மாற்றங்களால் இளம் வயதினருக்கும் இப்பாதிப்பு அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கும் சர்க்கரை பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சிகள் வாயிலாக தெரியவந்துள்ளன.
இதுகுறித்து, இதயங்கள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:
சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்; ஆனால், சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்றால் கொலையாளி என்று கூறலாம். சரியான கட்டுப்பாடு இருந்தால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது.
கட்டுக்குள் வைக்காமல் விட்டால், ரத்த குழாய்களை அடைத்து மாரடைப்பு ஏற்படும், பக்கவாதம், கண், கிட்னி, கால் என பல உறுப்புகளை பாதித்துவிடும். இதுசார்ந்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து உணவு என்பதை பின்பற்றவேண்டும்.
குழந்தைகளுக்கு அதிக தண்ணீர் தாகம், சிறுநீர் அடிக்கடி போதல், அகோர பசி, எடை இழப்பு போன்ற அறிகுறி இருந்தால் தாமதிக்காமல் சர்க்கரை அளவு பரிசோதிக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை பாதிப்புக்கு வீரியம் அதிகம்; ஒரு வாரத்தில் கோமா நிலைக்கு கொண்டு சென்றுவிடும். தமிழகத்தில் தற்போது சுமார், 15,000 குழந்தைகள் டைப்1 டயபடிக் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதில், தேசிய சுகாதார இயக்க திட்டத்துடன் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, அரசு மருத்துவமனைகளில் 3,330 சர்க்கரை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. டைப்1 குழந்தைகளுக்கான பதிவேடும் புதிதாக பராமரிக்கப்பட்டு தற்போது சுமார், 5000 குழந்தைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

