UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 11:54 PM

குன்னுார்: குன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியார் பகுதியில் விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில், பெரியளவிலான பாறைகளை அகற்றி, வாகன போக்குவரத்தை துவக்க சற்று தாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் – மேட்டுப்பாளையம் மலைப்பாதை, பர்லியார் பகுதியில் கடந்த, 23ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவால், அரசு பஸ் மீது பாறை விழுந்ததில், டிரைவர் பலியானார். இப்பகுதியில் பிற சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பர்லியாரில் அபாய பாறைகள் மற்றும் மண் அகற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள், டில்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதியுடன் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து, 5 மீ., அகல சாலையில், கூடுதலாக 3 மீ., அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில், விரிவாக்க இடத்தில் பெரியளவிலான பாறைகள் உள்ளதால், தற்போது அவற்றை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புவியியல் துறையினர் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கை தயார் செய்வதுடன், ‘டிரோன் சர்வே’ எடுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதனால், வாகன போக்குவரத்தை துவக்க சற்று தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.
நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‘பொக்லைன் உதவியுடன் ‘கம்ப்ரசர்’ கொண்டு ராட்சத பாறைகள் அகற்றப்படுகின்றன. விரிவாக்கம் செய்த இடத்தில் தார் ஊற்றி சீரமைக்கப்படும். உயரதிகாரிகள் ஓரிரு தினங்களில் ஆய்வு செய்த பின், வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படும். தாழ்வான இடத்தில் இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்படும்’ என்றனர்.
